சனி, 25 டிசம்பர், 2010

ஜோசப் பரராசசிங்கம்

துணிச்சல் மிக்க ஊடகத்துறை ஜம்பவான் ஜோசப் பரராசசிங்கத்தின் வாழ்வும் பிரிவும் - இரா.துரைரத்தினம்.
[ சனிக்கிழமை, 25 டிசெம்பர் 2010, 11:34.47 AM GMT +05:30 ]
கிழக்கில் உள்ள ஆற்றல் மிக்க அரசியல் தலைவரை அழித்து விட்டோம் என்று இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் சிங்கள தேசம் கொண்டாடிய அந்த நாளில் தமிழர்கள் முக்கியமாக மட்டக்களப்பு தமிழ் மக்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து விட்டோம் என கலங்கி நின்றார்கள்.
ஜோசப் பரராசசிங்கம் இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் படுகொலை செய்யப்பட்ட போது சிறந்த அரசியல் தலைவரை மனித உரிமை செயற்பாட்டாளரை சமூகசேவகரை சிறந்த ஊடகவியலாளரை இழந்து விட்ட மிகப்பெரிய வெற்றிடம் அந்த சமூகத்தில் ஏற்பட்டிருந்தது. சில இழப்புக்கள் வெற்றிடங்கள் காலக்கிரமத்தில் நிரப்பப்படுவதுண்டு. ஆனால் ஜோசப் பரராசசிங்கத்தின் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடம் மட்டக்களப்பு சமூகத்தில் இன்னமும் நிரப்பப்படவே இல்லை.
அவரை பலரும் அரசியல்வாதியாகவே அறிந்திருக்கிறார்கள். அவரின் அரசியல் ஆளுமை பற்றியே வியந்து பேசுவார்கள். அரச பணியாளராக, ஊடகவியலாளராக, மனித உரிமை செயற்பாட்டாளராக அரசியல்வாதியாக என்று அவர் பல தடங்களில் கால் பதித்திருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ஊடகத்துறையில் அவரின் தடங்களே ஆழமானவை என எண்ணுகிறேன்.
அவர் அரசியல்வாதியாக நாடாளுமன்ற உறுப்பினராக பிற்காலத்தில் பிரகாசித்தாலும் இறுதிவரை அவரை ஊடகவியலாளராகவே நேசித்து வந்தேன். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கூட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருக்கிறார்.
1981ஆம் ஆண்டு பகுதியில் லேக்கவுஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளராக நியமனம் பெற்று நான் அங்கு சென்ற போது ஊடகத்துறையில் அப்போது ஜோசப் அண்ணன், கதிர்காமத்தம்பி, நாகராசா என ஊடகத்துறையின் அனுபவம் மிக்க ஜாம்பவான்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நான் நியமனம் பெற்ற அதே சமகாலத்தில் தான் வீரகேசரி செய்தியாளராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டிருந்தார் ( நாங்கள் நித்தி என அன்போடு அழைக்கும் நித்தியானந்தன் இப்போது உயிரோடு இல்லை. பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 1992 ல் வீரச்சாவை தழுவிக்கொண்டார்)
ஜோசப் அண்ணன் தினபதி, சண் பத்திரிகைகளை வெளியிடும் குணசேனா நிறுவனத்தின் மட்டக்களப்பு செய்தியாளராகவும், கதிர்காமத்தம்பி வீரசேகரி கிழக்கு மாகாண அலுவலக சுற்றுநிருபராகவும், நாகராசா இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன மட்டக்களப்பு செய்தியாளராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
விடுதலைப்போராட்டம் ஆரம்பமான அந்தக் காலகட்டத்தில் ஊடகத்துறையும் நெருக்கடிகளை எதிர்நோக்க ஆரம்பித்திருந்தது. ஊடக கற்கைநெறியை மட்டும் பூர்த்தி செய்து விட்டு மிக இளவயதினராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த எனக்கும் நித்தியானந்தனுக்கும் ஊடகத்துறை அனுபவம் என்பது அப்போது மிகக்குறைவே. இளம்கன்று பயமறியாது என்பது போல நித்தியும் நானும் எங்காவது போய் முட்டி மோதிக்கொண்டால் அந்த சிக்கல்களிலிருந்து மீட்பவராக ஜோசப் அண்ணன் போன்றவர்களே திகழ்ந்தார்கள். ஊடகத்துறை என்பது போட்டி நிறைந்தது. ஆனாலும் கூட ஜோசப் அண்ணன் எங்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்ந்தார்.
தினமும் மாலையில் ஜோசப் அண்ணனின் வீட்டில் நான், நித்தி, நாகராசா ஆகியோர் கூடுவோம். அங்கு சுகுணம் அக்காவின் உபசரிப்பு இப்போதும் மறக்க முடியாத நினைவுகள். அந்த வீட்டில் நானும் நித்தியும் செல்லப்பிள்ளைகள். ஜோசப் அண்ணனும், சுகுணம் அக்காவும் எங்களை தங்களின் பிள்ளைகளைப்போலவே கவனித்து வந்தார்கள். எங்காவது முட்டி மோதிக்கொண்டிருக்கும் எங்களை கவனமடா என சுகுணம் அக்கா அடிக்கடி சொல்வா.
நித்தியானந்தனை புளொட் மோகன் குறூப் வெட்டிப்போட்ட போது வைத்தியசாலையில் ஜோசப் அண்ணனும், சுகுணம் அக்காவும் துடித்துப்போய் நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக உலங்குவானூர்தியை ஏற்பாடு செய்து கொழும்புக்கு அனுப்பி வைத்தவரும் ஜோசப் அண்ணன் தான். அதன் பின்னர் அவன் சுகம் அடைந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து விட்டான். 1992 ல் அவன் மீது இராணுவத்தினரும் புளொட் மோகனும் மறைந்திருந்து தாக்குதல் நடத்திய போது வீரச்சாவை தழுவிக்கொண்டான். அவனது மறைவைக்கேட்டு ஜோசப் அண்ணனும் சுகுணம் அக்காவும் தங்களுடைய பிள்ளை ஒன்றை இழந்துவிட்டதாக சோகத்தில் இருந்தனர்.
இப்பொழுதும் அந்த நாள் பசுமையாக நினைவிருக்கிறது. மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் நடந்த போது அன்றிரவு நான், நித்தியானந்தன், நாகராசா ஆகியோர் ஜோசப் அண்ணனின் சுபாராஜ் தியேட்டர் இல்லத்தில் கூடியிருந்தோம். சிறையில் இருந்து மீட்கப்பட்ட கைதிகள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது எங்களுக்கு தெரிந்திருந்திருந்தது. காவல்துறையினர் பல இடங்களிலும் தேடுதல்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது காவல்துறையினரின் கவனத்தை வேறு இடங்களுக்கு திருப்பும் வகையில் செய்தியை எழுத வேண்டும் என ஜோசப் அண்ணன் எங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
கடல்வழியாக கைதிகள் இந்தியாவுக்கோ வடபகுதிக்கோ கொண்டு செல்லப்பட்டு விட்டார்கள் என செய்தி எழுதினால் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தேடுதல்கள் நடத்துவதை காவல்துறையினர் குறைத்து விடுவார்கள் என ஜோசப் அண்ணன் கூறினார். அவர் கூறியது போலவே அனைத்து பத்திரிகைகளிலும் கைதிகள் கடல்வழியாக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர் கைதிகள் வைக்கப்பட்டிருந்த படுவான்கரையின் குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி காவல்துறையினர் தேடுதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டார்கள்.
சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்ட அரசியல்கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். சிலர் தமிழகத்திற்கு சென்றார்கள். அந்த அரசியல்கைதிகளை காப்பாற்றும் வெளியில் சொல்ல முடியாத பல பணிகளை ஜோசப் அண்ணன் செய்திருந்தார்.
1980 களின் பின்னர் மட்டக்களப்பில் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்திருந்தது. அப்போது கைது செய்யப்படுபவர்களை மீட்கும் பணியில் ஜோசப் அண்ணன் ஈடுபட்டிருந்தார்.
அக்காலத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டால் பெற்றோர்கள் ஜோசப் அண்ணனின் வீட்டை நாடியே செல்வார்கள். காவல்துறையினருடன் ஊடகவியலாளர் என்ற முறையில் தனக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி கைது செய்யப்படும் இளைஞர்கள் பலரை அவர் மீட்டிருக்கிறார். அவ்வாறு மீட்கமுடியாது போகும் சந்தர்ப்பங்களில் கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை சரியாக திரட்டி ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்வது தொடக்கம் அன்று பல வழிகளிலும் மக்களுக்கு கைகொடுக்கும் ஒருவராகவே அவர் திகழ்ந்தார்.
சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களுடன் மிக நேர்த்தியான வகையில் தொடர்புகளை பேணிவந்தார்.
இன்று ஈ, கொசு என அநாமதேயங்கள் தங்களைத் தாங்களே தேசிய ஊடகவியலாளர்கள் என சொல்லிக்கொள்ளும் நகைப்புக்கிடமான காரியங்களை பார்த்தால் கொள்கை உறுதியோடு அன்று பணியாற்றிய ஊடகவியலாளர்களான ஜோசப் அண்ணன், நித்தியானந்தன், கதிர்காமத்தம்பி போன்றவர்களின் ஆத்மா நிச்சயம் மன்னிக்காது. ஊடகத்துறை அனுபவமோ, பயிற்சியோ எதுவும் இல்லாது தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பது போல சிலர் தங்களை தேசிய ஊடகவியலாளர்கள் என சொல்லித்திரிவதை பார்த்து அனுதாபப்படத்தான் முடிகிறது.
அந்த மண்ணைவிட்டு சிங்கள பேரினவாதமும் அவர்களின் அடிவருடிகளாலும் நாங்கள் தூக்கி வீசப்பட்டாலும் ஜோசப் அண்ணன், கதிர்காமத்தம்பி, நாகராசா, போன்ற மூத்த ஊடகவியலாளர்களுடனும் சிவகுருநாதன், கோபு ஐயா, போன்ற அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஊடகவியலாளர்களின் கீழ் பணியாற்றியிருக்கிறோம் என்பது மனதுக்கு ஆறுதலையும் தென்பையும் தருகின்ற விடயங்களாகும்.
1983 க்கு முன்னர் மட்டக்களப்பில் இராணுவம் இருக்கவில்லை. 83 க்கு பின்னரே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முதல் காவல்துறையினரின் கெடுபிடிகளே இருந்தன. ஊடகவியலாளர்கள் காவல்துறையினரின் கெடுபிடிகளுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அந்த வேளையில்தான் ஊடகவியலாளர்களுக்கு என்று அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். அப்போது உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பு மட்டுமே ஊடகவியலாளர்களுக்கென இருந்த ஒரேயொரு அமைப்பு. அது கொழும்பை தலைமையகமாக கொண்டு முழுக்க முழுக்க சிங்கள ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவே இருந்தது.
அப்போது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமையையும் பலத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1983 ம் ஆண்டு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் அண்ணன்தான் தெரிவு செய்யப்பட்டார். நாகராசா செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இப்போது கொழும்பிலும் மாவட்டங்கள் தோறும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் பல இருந்தாலும் பிராந்திய மட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்தான். அந்த சங்கம் பிற்காலத்தில் பலமான அமைப்பாக உருவாகுவதற்கு ஜோசப் அண்ணன் போன்ற ஊடகவியலாளர்கள்தான் அத்திவாரம் இட்டிருந்தார்கள்.
2002 ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பை தலைமையகமாக கொண்ட இலங்கை தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்ட மறுநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜோசப் அண்ணன் தமிழ் ஊடகவியலாளர்கள் பலமாக இருக்க வேண்டும், அவர்களுக்கான ஊடகப்பயிற்சிநெறிகளை வழங்க வேண்டும் என பல ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
அவர் எப்பொழுதும் கொள்கையில் மிக உறுதியோடு செயல்பட்டு வந்தார் என்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும் முக்கியமாக இரு விடயங்களைச் சொல்லலாம்.
ஜோசப் அண்ணன் ஊடகவியலாளராக இருந்த போதிலும் தமிழரசுக்கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுவின் உறுப்பினராக இருந்தார். கதிர்காமத்தம்பி நித்தியானந்தன் ஆகியோரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளை அங்கத்தவர்களாக இருந்தனர். நானும் நாகராசாவும் எந்த ஒரு அரசியல்கட்சியிலும் இணைந்திருக்கவில்லை.
1977ஆம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி இரு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும் காசி ஆனந்தன் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்திலும் போட்டியிட்டனர். ஏனைய கட்சி வேட்பாளர்களை விட இவர்களுக்கிடையேதான் மிகப்பெரிய மோதலும் போட்டியும் காணப்பட்டது. அந்த வேளையில் ஜோசப் அண்ணன் இராசதுரையின் வெற்றிக்காகவே உழைத்தார்.
இராசதுரையே வெற்றிபெற்றார். அதன்பின் சூறாவளி அனர்த்தத்தை பார்வையிட தலைமை அமைச்சராக இருந்த பிரேமதாஸ வந்தபோது அவரை வரவேற்றதற்காகவும் மாவட்ட செயலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டதற்காகவும் இராசதுரை மீது தமிழர் விடுதலைக் கூட்டணி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து இராசதுரையும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி மட்டக்களப்பு கிளை உறுப்பினர்கள் என பலரும் ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டனர். அப்போது ஜோசப்பும் இராசதுரையின் பக்கம் செல்வார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் ஜோசப் அண்ணன் அந்த நேரத்தில் மிக உறுதியாக இருந்தார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியில் இராசதுரை இருந்ததற்காகவே அவரை ஆதரித்ததாகவும் அவர் கட்சியை விட்டு போனாலும் அவருக்கு பின்னால் தன்னால் போகமுடியாது என உறுதியாக இருந்தார். இராசதுரையும் ஜோசப் அண்ணனும் மிக நெருங்கிய குடும்ப நண்பர்கள். அதற்காக அவர் தன்னுடைய கொள்கையிலிருந்து விலகிச்செல்ல தயாராக இருக்கவில்லை.
மற்றொரு சம்பவம் 2004ஆம் ஆண்டு கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற போது நடந்தது.
2004ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் கருணா பிரிந்து செல்லப்போவதாக அறிவித்தார். கரடியனாறு அலுவலகத்திற்கு எட்டு வேட்பாளர்களையும் அழைத்து வன்னித் தலைமையை நிராகரிக்க வேண்டும் என்றும் கருணாவின் தலைமையையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தவேளையில் ஜோசப் அண்ணன் மட்டுமே மிக உறுதியாக இருந்தார். பிரபாகரனின் தலைமையை நிராகரித்து கருணாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியாக சொன்னார்.
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனியாக இயங்க வேண்டும் என்ற கருணாவின் கொள்கையை முற்றாக நிராகரித்த ஜோசப் அண்ணன் வடக்கு கிழக்கு இணைப்பே தமிழர்களின் பலம் என்றும் அந்த கொள்கையிலிருந்து தன்னால் ஒருபோதும் விலகமுடியாது என உறுதியாக சொன்னார். அதனால் அந்த தேர்தலில் ஏனைய ஏழு வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய முடிந்தது. ஒரு வேட்பாளர் ஒரு படி மேலே போய் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்த வேளையில் அதற்கு தலைமை தாங்கியதாகவும் கேள்விப்பட்டேன். ஜோசப் அண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார். அத்தேர்தலில் அவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.
கருணாவின் சதியை முறியடிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் சிலர் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலைகளை செய்தோம். அந்த வேளையில் ஜோசப் அண்ணன் பல வழிகளில் எங்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தார். அன்று கருணாவின் சதியை முறியடிப்பதற்காக செயற்பட்ட ஊடகவியலாளர்களில் சிலர் கொல்லப்பட்டு விட்டனர். ஏனையவர்கள் அனைவரும் மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். கருணாவினை ஆதரித்த ஊடகவியலாளர்கள் மட்டுமே மட்டக்களப்பில் பணியாற்றக்கூடிய சூழல் ஏற்பட்டது தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
மிகப்பலமாக ஒற்றுமையோடு மட்டக்களப்பில் செயற்பட்ட ஊடகக்குடும்பம் இப்போது சிதறிப்போய்விட்டது. மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்களிடம் இருந்த ஒற்றுமையும் பலமும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். அந்த பலத்தையும் ஒற்றுமையையும் எங்களுக்கு தேடித்தந்தவர் ஜோசப் அண்ணன்தான்.
2004ல் தேர்தலில் ஜோசப் அண்ணன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரசுக்கட்சியால் நியமிக்கப்பட்டார்.
கொள்கையில் உறுதியோடு செயற்படுவது என்ற விடயத்தில் ஜோசப் அண்ணனிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.
அதன்பின்னர் 2005ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு ஒன்றில் வைத்து ஜோசப் அண்ணனை சந்தித்த போது மட்டக்களப்பு ஊடகத்துறை பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். எப்போதும் தனக்கு பக்கபலமாக இருக்கும் ஊடகவியலாளர்கள் இப்போது மட்டக்களப்பில் இல்லையே என ஆதங்கப்பட்டார். மீண்டும் அந்த மண்ணுக்கு வருவோம். அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையை அன்று அவருக்கு ஊட்டியிருந்தேன்.
அந்த நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாகும் வகையில் ஜோசப் அண்ணனின் இழப்பும் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன.
ஆலையடிசோலையில் அமைதியாக உறங்கும் ஜோசப் அண்ணனின் பாதங்களில் மலர்தூவி அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அவரை நேசித்த எங்களைப்போன்றவர்கள் இருக்கிறோம்.
அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மட்டக்களப்பில் உறுதியான அரசியல் தலைவர்களை உருவாக்குவதும் துணிச்சலான ஊடகவியலாளர்களை உருவாக்குவதும் தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
thurair@hotmail.com