இ. மு. வி. நாகநாதன்
இலங்கை முருகேசு விஜயரத்தினம் நாகநாதன் Elangai Murugesu Vijayaretnam Naganathan மருத்துவர், நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நல்லூர் | |
பதவியில் 1960–1970 | |
பின்னவர் | சி. அருளம்பலம், (அஇதகா) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 31, 1906 |
இறப்பு | ஆகத்து 16, 1971 (அகவை 65) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
துணைவர் | இரத்தினவதி |
மரு. இ. மு. வி. நாகநாதன் (E. M. V. Naganathan, சனவரி 31, 1906 - ஆகத்து 16, 1971) இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல் 1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஜெபரத்தினம் ஜெ. என்சுமன், பொன்னம்மா (வண. ஆர். ஏ. வேதவனத்தின் மகள்) ஆகியோருக்கு நாகநாதன் பிறந்தார்.[1][2] தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றியவர்.[1] இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட என்சுமன் குடும்பம் கல்வி, மற்றும் தொழிலுக்காக தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள்.[3] நாகநாதனின் பாட்டனார் சார்லசு என்சுமன், பூட்டனார் வண. யோன் என்சுமன் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள்.[2] நாகநாதன் தனது ஆரம்பக் கல்வியை சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும், பின்னர் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார்.[4] பின்னர் இந்தியா சென்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.[2][4] அங்கிருந்து இங்கிலாந்து சென்று செல்ட்டன்ஹாம் கல்லூரியில் பயின்று மருத்துவரானார்.[4] கல்லூரியில் படிக்கும் போதே அரசியலில் ஈடுபாடு கொண்டார். கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து போராட்டங்களில் பங்குபற்றினார். சங்கத்தின் செயலாளராகவும், தலைவராகவும் இருந்துள்ளார்.[4] இலண்டன் பலத்மியோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிப் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.[2][4]
அரசியலில்
[தொகு]நாகநாதன் கொழும்பு திரும்பி மருத்துவராகப் பணியாற்றினார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் 1947 ஆம் ஆண்டில் அக்கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மேலவை உறுப்பினராகத் தெரிவானார். பின்னர், அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் முக்கிய உறுப்பினரானார். அக்கட்சியின் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். 1952, மற்றும் 1956 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மார்ச் 1960 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சூலை 1960, 1965 தேர்தல்களிலும் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1966 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்காக வீராவேசத்துடன் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் பேசும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அன்று நல்ல உடற்கட்டுடன், வலுவான தோற்றத்தைக் கொண்டிருந்த நாகநாதனை தமிழ் மக்கள் "இரும்பு மனிதன்" என்று அன்புடன் அழைத்தார்கள். 1970 தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட சி. அருளம்பலத்திடம் 508 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
1956 சூன் 5 அன்று, சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராகக் கொழும்பு, காலிமுகத் திடலில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் நாகநாதன் உட்பட பல தமிழ்த் தலைவர்கள் சத்தியாகிரகம் மேற்கொண்டனர்.[5] இவர்கள் சிங்களக் கும்பல் ஒன்றினால் காவல்துறையினரின் முன்னிலையில் தாக்கப்பட்டனர். இதன் போது நாகநாதன், வ. ந. நவரத்தினம் ஆகியோர் குண்டர்களினால் அருகிலுள்ள ஏரியில் தூக்கி எறியப்பட்டனர்.[6][7] 1958 வன்முறைகளை அடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தேசிய விமுக்தி பெரமுனை கட்சியும் அரசினால் தடை செய்யப்பட்டன.[8] நாகநாதன் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 10 பேர் 1958 சூன் 4 இல் கைது செய்யப்பட்டனர்.[9]
1961 இல் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாகநாதன் முக்கிய பங்கை வகித்தார்.[10] 1961 பெப்ரவரி 20 காலையில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் 55 முதல் 75 பேர் வரை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.[10][10][11] அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நாகநாதன் உட்படப் பலர் படுகாயமடைந்தனர்.[10][11]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நாகநாதன் அளவெட்டியைச் சேர்ந்த ஜோன் வேர்ட் பொன்னையா சேனாதிராஜா என்பவரின் மகள் இரத்தினவதி (இறப்பு: டிசம்பர் 11, 2006[12]) என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பிள்ளைகள். இவரது மூத்த மகள் மேரி லட்சுமி நாகநாதன் இலங்கையின் தூதுவராகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். இரண்டாவது மகள் ஆன் நிர்மலா தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனை மணம் புரிந்தார். மூன்றாவது மகள் கார்மேல் இந்திரா. இலங்கை அந்தோனி, யோன் ஆகியோர் மகன்கள்.[1]
மறைவு
[தொகு]சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நாகநாதன் 1971 ஆகத்து 16 ஆம் நாள் நள்ளிரவு தனது 65-ஆவது அகவையில் கொழும்பில் காலமானார்.[13]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக