1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி ((சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.
1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக